Monday, April 29, 2013

ஆரோக்கிய சமையல்

கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா

மட்டன் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய அசைவ உணவுகளில் ஒன்று. இது மிகவும் சுவையானதும் கூட. மட்டனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதிலும் மட்டன் குருமா, மட்டன் சுக்கா, மட்டன் குழம்பு என்று பல. இவை அனைத்துமே மிகவும் சுவையானது. இத்தகைய மட்டனை பல ஸ்டைலில் சமைக்கலாம். அதில் எப்போதும் செட்டிநாடு தான் பிரபலமானது. இப்போது அவற்றில் ஒரு ஸ்டைலான கேரளா ஸ்டைலில் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து செய்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்: 
 
மட்டன் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது) 
பூண்டு - 5 பல் (நறுக்கியது) 
தேங்காய் பால் - 1/2 கப்
 பட்டை - 1 
ஏலக்காய் - 3 
கிராம்பு - 3 
சோம்பு - 1 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
 மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் 
முந்திரி - 11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது) 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
வினிகர் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும். பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் குருமா ரெடி!!! இந்த குருமா சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.


புதினா இறால் குழம்பு

தினமும் சைவ உணவுகளை சாப்பிட்டு போர் அடித்தவர்கள், அவ்வப்போது அசைவ உணவுகளையும் சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இது கோடைகாலம் என்பதால், உடலுக்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தரும் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. எனவே இவைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, ஒரு புதுவிதமான ரெசிபியான புதினா இறால் குழம்பை செய்யலாம். இவை மிகவும் சுவையுடன் இருப்பதோடு, விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது அந்த புதினா இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!
 
தேவையான பொருட்கள்: 
 
 இறால் - 200 கிராம் 
புதினா - 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது) 
கொத்தமல்லி - 1/2 கட்டு (சுத்தம் செய்தது) 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
பூண்டு - 5 பற்கள் 
பச்சை மிளகாய் - 1-2 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் 
தேங்காய் பால் - 100 மி.லி 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 1 1/2 கப் 
 
செய்முறை: 
 
 இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 
நீலகிரி சிக்கன் குருமா
 
எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அவ்வாறு ஒரே மாதிரியை செய்து சாப்பிடுவதை விட்டு, தமிழ்நாட்டில் உள்ள வித்தியாசமான சில ஸ்டைல்களிலும் சிக்கனை செய்து சாப்பிடலாம். அவற்றில் ஒன்று தான் நீலகிரி ஸ்டைல். இதுமிகவும் குளிர்ச்சியான மலைப் பிரதேசம் என்பதால், இங்கு சற்று காரமாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். சரி இப்போது அங்கு செய்யப்படும் சிக்கன் குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!! 
 
தேவையான பொருட்கள்: 
 
சிக்கன் - 1 கிலோ 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
தக்காளி - 1 (நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு... 
 சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 2 
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன் 
முந்திரி - 8 
பச்சை மிளகாய் - 4 
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
தண்ணீர் - 3 1/2 கப் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும் இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 

சூரை மீன் கிரேவி
 
மீன்களில் சால்மன் மற்றும் டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும். இத்தகைய சூரை மீனை வைத்து கிரேவி செய்து வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு வலுவோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். இப்போது இந்த சூரை மீனை வைத்து எப்படி கிரேவி செய்வதென்று பார்ப்போமா!
 
தேவையான பொருட்கள்: 
 சூரை மீன் - 2 டின் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
பூண்டு - 4-5 பல் (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
தந்தூரி மசாலா - 1/2 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
 
சூரை மீன்களை நன்கு சுத்தம் செய்து, நீரில் கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பிறகு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், தந்தூரி மசாலா, சீரகப் பொடி சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து நறுக்கிய தக்காளியை போட்டு, 2-3 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் சூரை மீன்களை சேர்த்து ஒரு முறை கிளறி, தட்டு வைத்து 5-6 நிமிடம் மூடி வைத்து, பிறகு திறந்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். கிரேவியானது நன்கு கொதித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான சூரை மீன் கிரேவி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். 
 
 
 


No comments:

Post a Comment