மீல் மேக்கர் மசாலா
பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால்
அந்த மீல் மேக்கரை மதிய வேளையில் சாதத்திற்கு, மசாலாவாக செய்து கூட
சாப்பிடலாம். ஆம், இது சற்று வித்தியாசமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி.
மேலும் அனைவருக்கும் பிடித்ததாகவும் இருக்கும்.
ஆகவே இன்று மதியம் ஏதாவது ஒரு வித்தியாசமான ரெசிபி செய்ய நினைப்போருக்கு
இது சரியானதாக இருக்கும். அந்த மீல் மேக்கர் மசாலாவை எப்படி செய்வதென்று
கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, சுவை எப்படி இருந்தென்று
சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப் (வெதுவெதுப்பானது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
வெங்காயம் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வதக்கி விட
வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட
வேண்டும்.
பின் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
இப்போது மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம்
கொதிக்க விட வேண்டும்.
மசாலாவானது நன்கு கொதித்ததும், தீயை அணைத்துவிட்டு, அதன் மேல்
கொத்தமல்லியைத் தூவினால், அருமையான மீல் மேக்கர் மசாலா ரெடி!!!
காஷ்மீரி காராமணி மசாலா
காஷ்மீரி காராமணி மசாலா மிகவும் சுவையுடன் இருக்கக்கூடிய ஒரு மசாலா.
பொதுவாக காராமணியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை காராமணி மற்றொன்று
சிவப்பு காராமணி. இப்போது இந்த மசாலாவில் பயன்படுத்தியிருப்பது சிவப்பு
காராமணி. பெரும்பாலும் காஷ்மீரி உணவுகள் காரத்தில் மிகவும் குறைவாக
இருக்கும். ஏனெனில் காரம் அதிகம் இருந்தால், சுவை குறைந்துவிடும்
என்பதாலேயே.
மேலும் இதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல், சற்று வித்தியாசமான
முறையில் மசாலா செய்யப் போகிறோம். சரி, இப்போது அந்த காஷ்மீரி காராமணி
மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்
காஷ்மீரி காராமணி - 2 கப் (இரவு முழுவதும் ஊற வைத்தது)
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள காராமணியை கழுவி, குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீர்
ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் விசில் போனதும், தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
பிரியாணி இலை, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் துருவிய இஞ்சி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள
தக்காளியைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும்
உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பின் வேக வைத்துள்ள காராமணியைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி
விட்டு, இறுதியில் கரம் மசாலா சேர்த்து கிளறி, மீண்டும் 5-8 நிமிடம்
கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான காஷ்மீரி காராமணி மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத்
தூவி, பின் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
பச்சை மாங்காய் சாலட்
கோடைகாலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பார்த்ததும் வாயில் எச்சில் ஊற
வைக்கும் மாங்காய் சீசனும் ஆரம்பித்துவிட்டது. மாங்காய்க்கு என்றே தனிப்
பிரியர்கள் உள்ளனர். அவர்கள் மாங்காய் எவ்வளவு புளிப்புடன் இருந்தாலும்,
அந்த புளிப்பை பொருட்படுத்தாமல் சாப்பிடுவார்கள். அத்தகையவர்களுக்கு ஒரு
சூப்பர் டிப்ஸ் சொல்லவா?
மாங்காயை பச்சையாக கடித்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை சாலட் போன்று,
செய்து மாலை வேளையில் சாப்பிட்டால், சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த
மாங்காயை எப்படி சாலட் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சை மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1
சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த நறுக்கிய மாங்காயை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.
பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, இறுதியில் மேலே உப்பு தூவி பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான பச்சை மாங்காய் சாலட் ரெடி!!!
No comments:
Post a Comment