காலிஃப்ளவர் முட்டை டிப்
பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான காலிஃப்ளவரை வைத்து வறுவல், பஜ்ஜி,
மஞ்சூரியன் போன்றவற்றை செய்திருப்போம். அதனை முட்டையுடன் சேர்த்து
செய்திருக்கமாட்டோம். ஆனால் இப்போது காலிஃப்ளவரை, முட்டை மற்றும் சில
மசாலாப் பொருட்களில் நனைத்து, எண்ணெயில் பொரித்து ஒரு வித்தியாசமான
சுவையில் ஒரு ஸ்நாக்ஸை செய்யலாம்.
அதற்கு காலிஃப்ளவர் முட்டை டிப் என்று பெயர். இது மாலை வேளையில்
சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 கப்
முட்டை - 3
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, தனியாக
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் கரம் மசாலா, மிளகாய்
தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை முட்டைக் கலவையில் நனைத்து,
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் முட்டை டிப் ரெடி!!!
பச்சை பட்டாணி நிமோனா
வட இந்தியாவில் இருப்பவர்கள் தான் பச்சை பட்டாணி நிமோனாவை
கேள்விப்பட்டிருக்க முடியும். மற்றபடி வேறு எவருக்கும் இதை தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. இந்த ரெசிபி உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. பொதுவாக
இதுவும் குழம்பு போன்றது தான். சாதத்துடன் சாப்பிட ஏற்ற ஒரு வித்தியாசமான
குழம்பு தான் பட்டாணி நிமோனா.
இந்த மாதிரியான வித்தியாசமான ரெசிபியை ஏதேனும் விழாக்களின் போது செய்தால்,
விழாவே ஒரு வித்தியாசமாக இருக்கும். அதிலும் அன்னையர் தினம் வரப் போகிறது.
இத்தினத்தன்று அன்பான அம்மாவை அமர வைத்து, அவர்களுக்கு இந்த பச்சை பட்டாணி
நிமோனாவை செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும். சரி, அதன் செய்முறையைப்
பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 3 கப்
உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2-3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 3-4
பிரியாணி இலை - 2
வரமிளகாய் - 2
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சைப் பட்டாணியை ஓரளவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள்,
பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள
வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி உருளைக்கிழங்குகளை 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்கி, ஒரு தட்டில்
தனியாக போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்த
அனைத்துப் பொருட்களையும் போட்டு, 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா
பேஸ்ட்டை சேர்த்து, 3 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, மஞ்சள்
தூள், உப்பு, சர்க்கரை மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து, 2 நிமிடம் கிளறி
விட வேண்டும்.
இறுதியில் அரைத்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர்
சேர்த்து, 3 நிமிடம் கொதிக்க விட்டு, வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை
சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
10 நிமிடம் ஆனதும், மூடியைத் திறந்து, கரம் மசாலா தூவி கிளறி விட்டு,
இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பட்டாணி நிமோனா ரெடி!!! இது சாதத்துடன் சேர்த்து
சாப்பிட சிறந்ததாக இருக்கும்.