சிறகை விரித்து விட்டாய்
உயர எழும்பி விட்டாய்
உலகை மறந்து விட்டாய்
நீ எங்கே சென்று விட்டாய் ?
நீ சென்ற உலகில் கூட
நிறைந்திருக்கும் உன் வாசகர் கூட்டம்
நீ எழுதும் கதைகளை உன்
கருத்தான கட்டுரைகளை
கண்வழியே புசிப்பதற்காய்
பசித்திருக்கும் கூட்டம் ஒன்று
விஞ்ஞான உலகத்தில்
வியத்தகு வகையில் சிறப்புற்றும்
விடவில்லை அன்னைத்தமிழின் பற்று
விளையாடினாய் இலக்கிய முற்றத்தில்
வாசித்தோம்! அதனாலே
யோசித்தோம் .....
சுஜாதா என்னும்
சிந்தனைச் சிற்பி நீ
செதுக்கிய சிற்பங்கள் ஒவ்வொன்றும்
சொல்லும் கதை பன்முக வடிவங்கள்
"அம்பலம்" வழியே
அணை போட்டு பாய்ச்சினாய்
அன்னைத் தமிழின்
அன்பு இலக்கியத்தை
ஓரிரு எண்ணங்கள் என நீ
ஓராயிரம் கருத்துக்களை பகிர்ந்து
ஓடும் மனத்திரையின் காட்சிகளை
ஓவியமாய் வடித்த எழுத்தோவியன் நீ
பலகலைகள் தேர்ந்து நம் தமிழை
பலமான மொழியாக உயர்த்துங்கள் என்றே
பலமாகக் கத்திய முண்டாசுக் கவி
பாரதியின் கனவுகளை மெய்ப்பட வைக்க
பலதுறைகளிலும் உன் ஆற்றலை
பரிசாகக் கொடுத்தவன் நீ
சிறுகதைகள் மட்டுமல்ல , கட்டுரைகள் மட்டுமல்ல
திரைக்கதை வசனம் கொண்டு
திக்கெட்டும் திகழ்ந்தவன் நீ
தமிழகம் மட்டும் அழவில்லை சுஜாதா
தமிழர்கள் அனைவரின் கண்களிலும் நீர்
தம் வீட்டு இலக்கிய தோட்டத்து ரோஜா
தமை விட்டுச் சென்றதே என்று
உன்னுடல் இம்மண்ணை விட்டு
மறைந்திருக்கலாம்
ஆனால் உன் புகழ் இந்த
மண்ணோடு கலந்தது
அகிலம் முழுவதும் வாழும்
அனைத்துத் தமிழர்களின் மனங்களிலும்
அணையாது ஒளிவீசும் உன் புகழ்
இணையத்தின் மூலம் தமிழ் வளரும் என்று
இடித்துச் சொன்ன வீரத்தமிழன் நீ
இணையமொழி தமிழாக எத்துணை செயல்கள்
இனியவன் நீ ஆற்றினாய்
இதை இனி மறப்பரோ தமிழர்.
சுந்தரத் தமிழில் அற்புத படைப்புகள்
சிரப்புறக் கொடுத்தவனே எங்கள்
சுஜாதா உனது நினைவுடனேயே
சுடரும் எழுத்துக்கள் தெறிக்கட்டும்
உன் புகழ் வாழ்க ! உன் லட்சியம் வாழ்க !
உனை ஈன்ற தமிழன்னை வாழ்க
உன எம் சொந்தமாக்கிய தமிழ் வாழ்க.
அன்புடன்
சக்தி சக்திதாசன்
No comments:
Post a Comment