சுஜாதா என்றொரு பிரபஞ்சம். - ருத்ரா
தமிழ்சிற்பியே, தமிழ் இலக்கியத்தை நீ செதுக்கியபோது தெறித்த "சில்லுகள்" தோறும் கம்பியூட்டரின் சொல்லுகள் ஆயின.
"நைலான் கயிறு" மூலம் ஊஞ்சல் கட்டி உன் சிறுகதை விளையாட்டுகளை
தமிழ் வாசகர்களிடையே ஆரம்பித்து வைத்தாய்.
உன் நைலான் கயிறு நடைக்குபிறகு மற்றதெல்லாம் "காயிலான்"
கடைச்சரக்காகி போனது.
காதலாவது..கத்தரிக்காயாவது என்று ஒரு உட்குறிப்பை பொதிந்து வைத்தாலும் உன் கதைகள் லேட்டஸ்டாய் சுடிதார் உடுத்திக்கொண்டு வந்து முன்னே துறுத்திக்கொண்டு குறுகுறுப்பதில் கதையை கோர்க்கும் அச்சகத்து கம்பாசிடர்கள் கூட கணேஷ்களாயும் வசந்த்களாயும் காலரை உயர்த்தி விட்டுக்கொள்வார்கள்.
துப்பறியும் கதைகளை தொடங்கிவைத்தாலும் துப்பு கெட்ட இந்த சமுதாயமே
ஒரு குற்றவாளிக்கூண்டில் நின்று கொண்டிருக்கிறது என்று ஒரு புகைமூட்டமாய் உன் எழுத்துக்களில் நீரோட்டம் காட்டினாய்.
ஆம் நீயும் கூட எங்களுக்கு ஒரு புதுமைப்பித்தன் தான்.
எலக்ட்ரானிக் யுகத்து புதுமைப்பித்தன் நீ.
புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் கிழிந்த கோரைப்பாய்களும் காரை பெயர்ந்த வீட்டுச்சுவர்களும் செட்டிங் போட்டு உயிர்ப்போடு நிற்கும்.
செட்டியார் கடையில் கடன் வாங்கும் நடுத்தர நத்தைக்கூட்டுக்குள் லாவாவை கொப்புளிக்கத்தெரியாத எரிமலைகள் அரைத்தூக்கத்தில் கிடக்கும்.
நீயோ ப்ராக்டிகலாக அதாவது கற்றதையும் பெற்றதயும் கலக்கலாக்கி ஒரு அமிலக்கரைசலை எழுத்துக்களில் சிறு குழந்தை சாதாரணமாய் ஒண்ணுக்கு போது போல் காகிதங்களை நனைத்திநப்பாய்.
அதில் மெதுவாக தீ மூளுவது கூட ஜெயராஜின் வண்ணப்படத்தில் எழுச்சி காட்டும்.
நீ இன்னொரு புதுமைப்பித்தன் தான்.
இப்படி சொன்னால் அந்த புதுமைப்பித்தன் ஒன்றும்
கோபித்துக்கொள்ளப்போவதில்லை.
மணிக்கொடி நரம்பின் தொப்பூள் கொடி அவனிடம் வேர் விட்டிருந்தது என்றால்
உன்னிடம் அதன் உயிர்மகரந்தங்கள் நிறையவே ஒட்டியிருக்கின்றன.
புதுமைப்பித்தன் கதைகளில் மனிதனின் மனவெளியின் வெடிப்புகள்
உருவெளி ஓவியங்களாய் (ஹாலுசினேஷன்) படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
போலித்தனத்தின் மீது கண்ணுக்குத்தெரியாத கருந்தேள் ஒன்று கொட்டுவது போல் ஆனால் கொட்டாமலேயே ஒரு சமுதாயவலியை ஊமையாய் "ஓங்காரம்"
செய்து கொண்டிருக்கும்.
உன் கதைகளில் நாகரிகம் விஞ்ஞானப் பூச்சுடன் ஒரு அக்ரிலிக் சாயத்தில்
கண்களை கூச வைத்துக்கொண்டே இருக்கும்.
மரத்துப்போன இந்த பம்மாத்து மனங்களுக்கு நறுக்கென்று ஊசி போட்டு
கருத்து ஊன்றுவதில் ஒரு நுட்பம் உண்டு.
ஒரு திட்பம் உண்டு புதுமைப்பித்தனிலிருந்து பதியம் போட்ட
புதுமைச்சித்தன் நீ.
மக்கள் உணர்ச்சிகளின் மண்ணணுவை அணு அணுவாக
அவன் எழுதினான்.
நீயோ மின்னணுயுகத்தில்
மனிதனின் நிமிடத்துக்குள் கூட
நுழைந்து
அதன் கோடிக்கணக்கான
துடிப்புகளான
நேனோ செகண்டுகளை
ஒரு கரப்பான் பூச்சிபோல
"படம் வரைந்து பாகம் குறித்து காட்டிவிட்டாய்"
அவன் சமுதாயத்தை
தோலுரித்துக்காட்டினான்.
நீயோ
தோலுரிக்காமலேயே
உன் எக்ஸ்-ரே கண்ணால்
அந்த அவலங்களை
நிர்வாணமாக்கினாய்.
அவன் சமூகவிஞ்ஞானத்தை
எங்களுக்கு புகட்டினான்.
நீயோ
ஒரு விஞ்ஞான சமூகத்தை
எங்களுக்கு விளக்கிக்காட்டினாய்.
விஞ்ஞானிகளையும்
உன் பேனாக்களில் அடைத்து
அற்புதம் காட்டினாய்.
ஐன்ஸ்டீன்களையும்
டாக்டர்.
பென்ரோஸ்களையும்
ஸ்டீ·பன் ஹாக்கிங்ஸ்களையும் கூட
எங்கள் நெஞ்சில்
நீங்காமல் நிற்கும்
கதாநாயகர்களாக காட்டியிருக்கிறாய்.
இயல் இசை நாடகம்
என்ற முத்தமிழ் தெரியும் எங்களுக்கு
ஆனால்
நீ தானே
"இயற்பியல் தமிழையும்" (thamiz with physics)
எங்களுக்கு இயல்பாய் ஆக்கினாய்.
அதனால்
இந்த மின்னணு யுகமும்
மின்னஞ்சல் யுகமும்
தமிழின் முகம் மாற்றின.
உன் கதைகளின்
காதலன் - காதலி கூட
உனக்கு வெறும் "பைனரி" தான்.
பூலியன் அல்ஜீப்ராவிலிருந்து
புளிச்சு போன இந்த
காதல் அல்ஜீப்ரா வரைக்கும்
நீ காட்டிய மந்திர வித்தைகள்
எங்கள் மனத்தையெல்லாம்
கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன.
புளிக்க புளிக்கத் தான்
கள் சுவைக்கும்
என்று
உன் காதல் நாவல்கள்
ஒரு ·பார்முலாவை
உள்ளே
போர்த்திவைத்திருக்கும்.
விஞ்ஞானத்தின்
எந்த மூலையையும்
இனிப்பு தடவி
உன் எழுத்துக்களில்
நீ தரும்போது
தமிழ் வாசகர்களெல்லோரும்
கொள்ளையடிக்கப்பட்டுவிட்டார்கள்.
அப்படித்தான்
இதயத்தின் ஆரிக்கிள்- வெண்டிரிக்கிள் பற்றி
பத்திரிகையில்
நீ பாடம் எடுக்கும் போது
அந்த அற்புதத்தை அறிய
உன் இதயமே
அங்கு வந்து உட்கார்ந்துகொண்டது.
ஆம் அதனால்
அது துடிக்க மறந்தது...
அந்தோ கொடுமை..
இதோ
அந்த லட்சக்கணக்கான கண்களின்
கண்ணணீர் வெள்ளத்தில்
அந்த இதயமும்
வேதனையால் துடித்துக்கொண்டு தான்
இருக்கிறது.
தமிழ் எழுத்துக்களின்
கலைக்களஞ்சியமே!
உன்
கலைக்களஞ்சியத்தை நீயே புரட்டிப்பார்.
சுஜாதா என்ற வார்த்தைக்கு
என்ன அர்த்தம் போட்டிருக்கிறது என்று....
"பிறக்கும்போதே
21-ஆம் நூற்றாண்டை நூல்கண்டாக்கி
பட்டம் விடத்தெரிந்த மேதை."
ஆம்.
காலம் வேகமானது தான்.
அதையும் விட வேகமாக சிந்திக்கும்
ஒளியாண்டுகளை(light years)
உடையவன் நீ.
டேக்கியானின்(tachyon) வேகம்
உன் அறிவின் வேகம்.
காலமானார் சுஜாதா
என்பதைகூட
நீ கட்டுரை எழுதினால்
"சுஜாதாவால் காலம் தோற்கடிக்கப்பட்டது"
என்று தான் தலைப்பு கொடுத்திருப்பாய்.
அதுவே தனி முத்திரை கொண்ட
சுஜாதாவின் space-time எனும்
சுஜாதாவின் மகத்தான பிரபஞ்சம்.
- ருத்ரா