அதோ
இதோ” என்று ஆரூடங்களில் தெரிவிக்கப்பட்ட விண்டோஸ் 10 இயக்க முறைமை
வெளியாகும் நாள், அதிகாரபூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால்
அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 29 முதல் கோடிக்கணக்கான தகுதி உள்ள
கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்படும். அதற்கு இப்போதே
முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான வழியையும் மைக்ரோசாப்ட் வழங்கி
வருகிறது. அன்றைய நாள் முதல் வாங்கப்படும் புதிய கம்ப்யூட்டர்களில்
பதியப்படும் விண்டோஸ் சிஸ்டம், விண்டோஸ் 10 ஆக மட்டுமே இருக்கும்.
விண்டோஸ்
7, விண்டோஸ் 8 மற்றும் 8.1 இயக்க முறைமை பயன்படுத்தப்படும் உங்கள்
கம்ப்யூட்டரில் தானாக அப்டேட் செய்திடும் வசதியை நீங்கள்
ஏற்படுத்தியிருந்தால், கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில், வலது மூலையில் சிறிய
விண்டோஸ் ஐகான் காட்டப்படுவதனைக் காணலாம். இதுதான் "Get Windows 10" ஐகான். இதில் கிளிக் செய்தால், உடன் "Get Windows 10"
என்ற முன்பதிவு செய்திடும் பக்கம் கிடைக்கிறது. இதில் பதிவு செய்திடவும்,
பின்னர் குறிப்பிட்ட நாளில் எப்படி, தற்போதைய சிஸ்டம் விண்டோஸ் 10க்கு
அப்கிரேட் செய்திடப்படும் எனவும் தகவல்கள் ஆறு திரைக் காட்சிகளில்
தரப்படுகின்றன. இவற்றில் "Reserve your free upgrade now" என்ற பட்டன் மிக முக்கியம். இதில் கிளிக் செய்தாலே, உங்கள் கம்ப்யூட்டருக்கான விண்டோஸ் 10 முன்பதிவு மேற்கொள்ள முடியும்.
இதில்
கிளிக் செய்தவுடன் உங்கள் மின் அஞ்சல் முகவரி கேட்டுப் பெறப்படும். பின்
நாளில், விண்டோஸ் 10 உங்களுக்குத் தரத் தயாராக இருக்கும்போது, இந்த அஞ்சல்
முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். இந்த நடைமுறையினை மைக்ரோசாப்ட் "Anticipation UX." என அழைக்கிறது. எந்த நிலையிலும் நீங்கள் உங்கள் முன்பதிவினை ரத்து செய்திட முடியும். மீண்டும் இந்த Get Windows 10 ஐகானில்
கிளிக் செய்து ரத்து செய்திடும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். இந்த விண்டோ
கிடைக்கும்போது, மேலாகக் காட்டப்படும், மூன்று படுக்கை கோடுகள் அடங்கிய
ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். இங்கு View confirmation. என்பதனைத் தேர்ந்தெடுத்தால், கிடைக்கும் பட்டியலில் Cancel reservation என்பதில் கிளிக் செய்து ரத்து செய்து கொள்ளலாம்.
கோடிக்கணக்கான
கம்ப்யூட்டர்களில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், புதிய ஆப்பரேட்டிங்
சிஸ்டத்தினைப் பதிந்திட முடியுமா? என்ற வினா அனைத்து பயனாளர்களின் மனதில்
தோன்றலாம். அந்த வகையில், சாப்ட்வேர் செயலிகள் வழங்குவதில் இந்த அப்கிரேட்
புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த
இலவச அப்கிரேட், விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் சர்வீஸ் பேக் 1
(SP1)பதியப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 8.1 பதியப்பட்டுள்ள
கம்ப்யூட்டர்களிலும் தரப்படும். நிறுவனங்களுக்கான கம்ப்யூட்டர்களில் இலவசமாக இது பதியப்பட மாட்டாது. இந்த
புதிய சிஸ்டம் அப்கிரேட் பைல் 3 ஜி.பி. அளவில் இருக்கும் என்று
சொல்லப்பட்டாலும், அந்த அளவினைக் காட்டிலும் சற்று குறைவான அளவிலேயே மொத்த
பைல்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
190 நாடுகளில், 111 மொழிகளில் விண்டோஸ் 10 சிஸ்டம் பதியப்பட இருக்கிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். ஆப்பிள்
நிறுவனம் அதன் மேக் கம்ப்யூட்டர்களில், தன்னுடைய OS X ஆப்பரேட்டிங்
சிஸ்டம் மேம்படுத்துதலை இப்படித்தான் மேற்கொண்டு வருகிறது. ஆனால், அது
மிகச் சிறிய அளவிலானது ஆகும். மைக்ரோசாப்ட்
எப்படி இதனை நிறைவேற்றப் போகிறது என்பது அதன் Get Windows 10 செயலியில்
உள்ளது. இதில் உள்ள XML பைலில் இதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. உடன்
தரப்படும் பைல்கள் அனைத்திலும் GWX என்ற சுருக்கெழுத்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது Get Windows 10 என்பதன் சுருக்கமாகும். இந்த பைல்களில், நான்கு திட்டமிட்ட வழிமுறைகளை மேற்கொள்கிறது.
முதல் நிலையில் "appraiser"
வழிமுறை மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட கம்ப்யூட்டர், விண்டோஸ் 10 ஏற்றுக்
கொள்வதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ஏற்கனவே கொண்டுள்ளதா? அது
முறையானதுதானா? என்று கண்டறியப்படும். பின்னர், GWX என்ற போல்டரில் உள்ள
XML மற்ற அப்டேட் வழிகளை மேற்கொள்ளும். முதலில் தரப்பட்டது "Anticipation UX." என்ற டாஸ்க் பார் ஐகான் வழி முன்பதிவு. அடுத்தது Reservation Page. இங்கு
நீங்கள் முன்பதிவினையும், தொடர்ந்து விண்டோஸ் 10 சிஸ்டத்தினையும் ஏற்றுக்
கொள்ள வேண்டும். இதன் பிறகு, மேற்கொள்ளப்படுவதெல்லாம், உங்களுடைய செயல்பாடு
எதுவும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் Upgrading, Download In Progress, Download Complete, Ready for Setup, Setup in Progress, Setup Complete நிலைகளாகும்.
நாம்
அனுமதி கொடுக்காமல், விண்டோஸ் 10 நம் கம்ப்யூட்டரில் பதியப்பட மாட்டாது.
தகுதி உள்ள கம்ப்யூட்டர்களில், முற்றிலும் இலவசமாகவே இது பதியப்படும். விண்டோஸ்
10 சிஸ்டம் மக்களுக்கு ஜூலை 29 முதல் வெளியான பின்னால், அதில் இயங்கும்
சில செயலிகளும், ஏற்கனவே இயங்கும் செயலிகளுக்கான மேம்படுத்துதல்களும்,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும். எடுத்துக் காட்டாக, “ஒன் ட்ரைவ்” க்ளவ்ட் சர்வர் இணைப்பு மேற்கொள்ளப்படும். இதைப் போல சிறிய அளவிலான மேம்படுத்துதல்கள் மேற்கொள்ளப்படும். ஓராண்டுக்குப் பின்னர், Redstone
என்ற குறியீட்டுப் பெயரில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும்
மேம்படுத்துதல்கள் மொத்தமாகத் தரப்படும். அதன் பின் என்னவாகும்? தொடர்ந்து
அந்த சாதனம் இயங்கும் வரையிலும் ("for the supported lifetime of your device,") அதற்கான அப்டேட் வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
எட்ஜ் பிரவுசர், காலண்டர் மற்றும் மெயில் செயலிகள் தனியே தரப்படும். விண்டோஸ் ஸ்டோர் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். எத்தனை
பேர் இந்த புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்தினை விரும்புவார்கள்? இந்த கேள்வி
எல்லாருடைய மனதிலும் உள்ளது. இதுவரை விண்டோஸ் 8 பயன்படுத்தி வந்தவர்கள்,
விண்டோஸ் 10 பெறுவதற்காகவே, அவசர அவசரமாகத் தங்கள் கம்ப்யூட்டர்களை
விண்டோஸ் 8.1க்கு அப்கிரேட் செய்துள்ளனர். ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டம்
இயக்குபவர்கள், அந்த அளவில் ஆர்வம் காட்டவில்லை. இவர்களிடம் விண்டோஸ் 10
சிஸ்டத்தினை உடனடியாக “விற்பனை செய்வது” மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு
சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்டோஸ்
10 சிஸ்டம் குறித்த தகவல் 2014 ஆம் ஆண்டில், செப்டம்பர் மாதம் வெளியானது.
கம்ப்யூட்டர், டேப்ளட் மற்றும் மொபைல் சாதனங்கள் அனைத்திற்குமாக ஒரே
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ற அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தொழில் நுட்ப ரீதியான சோதனைத் தொகுப்பினை மைக்ரோசாப்ட் வழங்கிய போது,
மக்கள் ஆர்வத்துடன் அதனைப் பெற்று இயக்கினர். தங்களுடைய பின்னூட்டங்களை
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அனுப்பினார்கள். சென்ற மே மாதம் வரை இந்த
திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தைத்
தாண்டியது.
மைக்ரோசாப்ட்
தொடர்ந்து தன் சோதனைத் தொகுப்பின் பதிப்புகளை வழங்கியது. உடன் தன் புதிய
பிரவுசர் செயலியை “எட்ஜ்” என்ற பெயரில் வழங்கியது. பிரைவேட் பிரவுசிங்,
யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் தானாக அமைத்தல், அடிக்கடி பார்க்கப்படும்
இணைய தளங்களை, அவற்றின் அன்றைய புதிய தகவல்களுடன் மேலாகக் காட்டுதல் போன்ற
பல புதிய வசதிகள் இந்த புதிய பிரவுசரில் கிடைக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய சோதனைத் தொகுப்பிலும் இவை பயன்பாட்டிற்குக்
கிடைக்கின்றன.
விண்டோஸ்
10 சிஸ்டம் தர இருக்கும் புதிய வசதிகள் குறித்து ஏற்கனவே பல கட்டுரைகளில்
தரப்பட்டதை நினைவில் கொண்டு, இந்தப் புதிய சிஸ்டத்தைப் பெறும் வகையில்,
உங்கள் கம்ப்யூட்டரின் தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருந்தால், விண்டோஸ்
10 பெறுவதற்கு முன்பதிவினை மேற்கொள்ளலாம்.
உங்களுடைய
கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 மற்றும் எஸ்.பி. பேக் 1, விண்டோஸ் 8.1 உடன்
இயங்கினாலும், டாஸ்க் பாரில் விண்டோஸ் ஐகான் காட்டப்படவில்லை என்றால்,
உங்கள் சிஸ்டம் இன்னும் அப்டேட் செய்யப்பட வேண்டும் என்று பொருள். தேடல்
கட்டத்தில் Windows Update என
டைப் செய்து, எண்டர் தட்டி, கிடைக்கும் விண்டோ மூலம் அப்டேட் செய்திட
வேண்டிய பைல்களைத் தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். அதன்
பின்னர், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து, புதிய சிஸ்டம் பெற வரிசையில்
துண்டு போட்டு உங்கள் இடத்தை உறுதி செய்திடலாம். உலகில் இயங்கும்
கம்ப்யூட்டர்களில், 90% கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் சிஸ்டம்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாமும் அவர்களில் ஒருவராக இருக்க இன்றே
நம்மைத் தயார் செய்து கொள்ளலாம்.
ஜுலை
29 தொடங்கி, ஓர் ஆண்டுக்குள், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப்
பெற்று இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இல்லை எனில், கட்டணம் செலுத்தித்
தான் பெற வேண்டியதிருக்கும். விண்டோஸ்
8.1 விற்பனை செய்யப்பட்ட விலைக்கே, விண்டோஸ் 10 கிடைக்கும். விலை 119
டாலர். விண்டோஸ் 10 புரபஷனல் 199 டாலர். விண்டோஸ் 10 ஹோம் பெற்றவர்கள்,
அதனை விண்டோஸ் ப்ரோ பதிப்பிற்கு உயர்த்திக் கொள்ள 99 டாலர்
செலுத்தவேண்டும். 2018க்குள் தன் விண்டோஸ் இயக்க முறைமையை நூறு கோடி சாதனங்களில் கொண்டு வர மைக்ரோசாப்ட் இலக்கு வைத்துள்ளது.