Wednesday, November 28, 2012

அறுசுவை உணவு

தேங்காய் பால் புலாவ்

சாதாரணமாக புலாவ் செய்வது மிகவும் எளிது. அதிலும் இது காலை வேளையில் பள்ளிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செய்து எடுத்துச் செல்ல ஈஸியான ஒரு ரெசிபி. அத்தகைய புலாவ் ரெசிபியில், நாம் தேங்காய் பால் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
சிவப்பு வெங்காயம் - 1 (நறுக்கியது)
குங்குமப் பூ - 1 பெரிய சிட்டிகை
தேங்காய் பால் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சற்று அதிக அளவு எண்ணெய் ஊற்றி காயந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியை மட்டும் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு அந்த வெங்காயத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் மட்டும் இருக்குமாறு வைத்து, மீதமுள்ள எண்ணெயை எடுத்துவிடவும்.

பின்னர் அந்த எண்ணெயில் கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து, லேசாக வறுக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு டீஸ்பூன் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த பாலை குங்குமப்பூவில் சேர்த்து, குங்குமப்பூவை நன்கு கரையும் வரை ஊற வைக்க வேண்டும்.

இப்போது தேங்காய் பால், பால் மற்றும் குங்குமப்பூ பாலை அரிசியுடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தீயை குறைவில் வைத்து, பாலில் அரிசி வெந்து, நீர் சுண்டும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். அரிசியானது வெந்ததும், அதில் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, கிளறி இறக்கவும்.

இப்போது சுவையான தேங்காய் புலாவ் ரெடி!!!

காராமணி மசாலா

 பீன்ஸ் வகையில் ஒன்றான காராமணியில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே இவற்றை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இதனை மசாலா செய்து சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர். சரி, அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காராமணி - 1 கப்
வரமிளகாய் - 12
தேங்காய் துருவல் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் காராமணியை அரைமணிநேரம் நீரில் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, காராமணியை கழுவி போட்டு, 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைக்கவும். பிறகு ஒருவாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வரமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த மிளகாயை, தேங்காய், பூண்டு, புளி, சிறிது வேக வைத்துள்ள காராமணி ஆகியவற்றோடு அரைக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, அதில் தக்காளியை போட்டு, தக்காளியின் தோலை உரித்து, அதனையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள காராமணி, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு சிறு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்ற வேண்டும். இப்போது சுவையான காராமணி மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

சேமியா பொங்கல்

சனிக்கிழமை அன்று அனைவருக்கும் பொதுவாக விடுமுறையாக இருக்கும். அப்போது சற்று வித்தியாசமான முறையில் ஏதேனும் ஒரு ரெசிபியை ட்ரை செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும் அல்லவா? அப்படியெனில் அதற்கு சேமியா பொங்கல் சரியாக இருக்கும். அந்த சேமியா பொங்கலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சேமியா - 2 கப்
பயத்தம் பருப்பு - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிது (துருவியது)
முந்திரிப் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பயத்தம் பருப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பருப்பை முக்கால் பதம் வரை வேக வைக்கவும்.

பிறகு அதோடு வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, இரண்டையும் நன்கு குழைய வேக வைக்கவும்.

பின் அத்துடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.அதே நேரத்தில் மற்றொரு பக்கம் மற்றொரு வாணலியை வைத்து நெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அந்த சேமியாவில் போட்டு, ஒரு முறை கிளறி இறக்க வேண்டும்.

இப்போது அருமையான சேமியா பொங்கல் ரெடி!!! இதனை தேங்காய சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.